சென்னை: திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் இன்று (4ம் தேதி) பிறப்பித்த உத்தரவு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ்குமார் யாதவ், போலீஸ் வீட்டு வசதி கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பில் இருந்த முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 31ம் தேதி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருக்கும் தினகரன், அந்த பிரிவில் சைலேஷ் குமார் யாதவின் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். பொதுப்பிரிவு ஐஜி டி.செந்தில் குமார் மேற்கு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஜி பவனேஷ்வரி நிறுவன பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா, திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணைய ஐஜி மகேந்தர் குமார் ரத்தோட் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஐஜியாக இருந்த ப.சாமுண்டீஸ்வரி பொதுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு ஐஜி ராதிகா, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த பி.கே.செந்தில் குமாரி குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். போலீஸ் நலப் பிரிவு ஐஜி நஜ்முல் ஹோடா நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக இருந்த பா.மூர்த்தி, திருநெல்வேலி சப்ளை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பிரவேஷ்குமார், சென்னை வடக்கு போலீஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் தீக் ஷித் ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் சரக்கு டிஐஜி அபினவ்குமார் ராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த எம்.துரை, போலீஸ் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் தேவராணி, வேலூர் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த சரோஜ்குமார் தாக்கூர், சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.