தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள சங்கராபுரம் தான் நடிகர் தனுஷின் சொந்த ஊராகும். அங்குள்ள கருப்பசாமி கோயில் அவரது தாயார் வழி குலதெய்வக் கோயிலாகும். தனுஷ் தனது ஒவ்வொரு திரைப்படமும் வெளியாவதற்கு முன்பாக இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த மரபின்படி வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் இட்லி கடை திரைப்படத்தை முன்னிட்டு இன்று குடும்பத்துடன் சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
தனுஷின் தாய் தந்தையரின் சொந்த ஊராகிய இந்த கிராமத்திலிருந்து அவரது குடும்பம் சென்னை நகருக்கு இடம்பெயர்ந்தது. கஸ்தூரி ராஜா சினிமாவில் கடுமையாக உழைத்தாலும் சிரமங்களை சந்தித்தார். ஆனால் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் சினிமாவில் வெற்றி பெற்று முன்னேறினர். இன்று தனுஷ் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், செல்வராகவன் திறமையான இயக்குநராகவும் உயர்ந்துள்ளனர். இந்த வெற்றியின்போதும் தன் வேரை மறக்காமல் தொடர்ந்து சொந்த ஊருக்கு சென்று வருவது தனுஷின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அங்கு உள்ள கருப்பசாமி கோயில் அவரது குடும்பத்திற்கான ஆன்மீக மையமாக உள்ளது. தனுஷின் தாய் மாமா மற்றும் பிற உறவினர்கள் இன்னும் அங்கேயே வசித்து வருகின்றனர். இந்தக் கோயிலில் தான் தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவருக்கும் தலை முடி காணிக்கை நடைபெற்றது. மேலும் தனுஷ்-ஐஸ்வர்யா திருமணத்திற்குப் பிறகு அவர்கள் முதலில் இந்தக் கோயிலுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று தனது பெற்றோர், மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கருப்பசாமி கோயிலில் வழிபாடு செய்த தனுஷ், தனது குலதெய்வத்தை வணங்கி இட்லி கடை பட வெற்றிக்காக வேண்டினார். ஊருக்குள் சென்று தனது உறவினர்களுடன் உரையாடுவதையும் தவறவிடாமல் செய்தார். அவர் எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், தனது மரபையும் குடும்ப வேரையும் மதிக்கும் தனுஷின் இந்த நடத்தை, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.