சென்னையில் நடைபெற்ற உயர்நீதிமன்ற விசாரணையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி தொடர்பாக முக்கியமான விவாதம் நடந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களுக்கான கட்டணத்தை அரசு தர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழகத்திற்கு நிதியை வழங்க மறுத்துவிட்டது. இதனால் தனியார் பள்ளிகள் சங்கம் நிதி கிடைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முந்தைய உத்தரவில், 2024-2025 கல்வியாண்டுக்கான கட்டணமும், 2025-2026 கல்வியாண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் அந்த உத்தரவை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து தனியார் பள்ளிகள் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இன்று நீதிபதி தண்டபாணி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசாங்கம் உரிய நிதி வழங்காமல் இருப்பதை சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன், மத்திய அரசு வழங்க வேண்டிய 60 சதவீத நிதி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே வழங்கப்படும் என்று மிரட்டுவதாகக் கூறினார். தமிழக அரசு இந்த அழுத்தத்திற்கு ஒருபோதும் இணங்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி தண்டபாணி, “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி கிடைக்குமே” எனக் குறிப்பிட்டார். ஆனால் தமிழக அரசு அதற்கு எதிராக வலுவான நிலைப்பாடு எடுத்துள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அடுத்த மாதம் 24 ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.