இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கி தற்போது துபாயில் சிக்கலில் சிக்கியுள்ளது. துபாய் சர்வதேச நிதி மையத்தில் இயங்கி வரும் அந்த வங்கியின் கிளைக்கு, துபாய் நிதி சேவைகள் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களிடையே கவலை நிலவுகிறது.
வங்கியின் அறிவிப்பின்படி, துபாய் கிளை புதிய வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு நிதி சேவைகளையும் வழங்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முதலீட்டு ஆலோசனைகள், கடன் ஏற்பாடு, செக்யூரிட்டி சேவைகள் போன்றவை அடங்கும். மேலும் புதிய வாடிக்கையாளர்களுக்கான விளம்பரங்களும் நடத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தடை ஏற்கனவே சேவை பெற்று வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என்று வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது அந்த கிளையில் சுமார் 1,489 வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், இவை வங்கியின் மொத்த வணிகத்தில் பெரும் தாக்கம் செலுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
துபாய் நிதி சேவைகள் ஆணையம், வங்கியின் ஆன்போர்டிங் செயல்முறைகளில் சிக்கல்கள் உள்ளதாகவும், விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்ற கவலையுடன் இந்த முடிவை எடுத்துள்ளது. வங்கி தனது விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும், அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் ஹெச்டிஎஃப்சி வங்கி மீது Credit Suisse பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிக ஆபத்துள்ள இந்த முதலீட்டு கருவிகள் தகுதியற்றவர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்பட்டது. Credit Suisse வங்கியின் சரிவின் போது பலர் முதலீட்டு இழப்புகளை சந்தித்தனர். இதனால் ஹெச்டிஎஃப்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே, துபாயில் இயங்கும் கிளைக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வங்கி விரைவில் இந்தச் சிக்கல்களை சரிசெய்து, தடை நீக்கம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.