சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 குழந்தைகள், 17 பெண்கள் அடங்குவர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பார்த்திபன், “கூட்டம் போடாதீர்கள் – வாழ்வை தொலைக்காதீர்கள். அதிலும் பிஞ்சு குழந்தைகள் உயிரை பலியாக்காதீர்கள்” என்று உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டார்.

நடிகர் கார்த்திக், “கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரம். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன், “இழந்த குடும்பங்களுக்கு என் மனமார்ந்த இரங்கல். இந்த வேதனையை தாங்கும் வலிமை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவு செய்தார்.
மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும், “கரூரில் நடந்த துயரச் சம்பவம் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. குடும்பங்களுக்கு ஆறுதல் கிடைக்க பிரார்த்திக்கிறோம். காயமடைந்தோர் விரைவில் குணமடையட்டும்” என்று தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்திய சினிமா உலகமே ஒன்றுபட்டு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.