பனாஜி: கோவா மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மாவட்ட பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் கோவா மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கட்சியின் கோவா மாநிலத் தலைவர் அமித் பலேகர் தெரிவித்ததாவது: “கோவா மாநிலத்தில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளதால், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த கெஜ்ரிவால் வருகிறார். வடக்கு மற்றும் தெற்கு கோவாவில் தலா ஒரு இடத்தில் கூட்டங்கள் நடைபெறும். இதில் அவர் தேர்தல் வியூகங்களை விரிவாக விவாதிக்கிறார்” என்றார்.
மேலும், கட்சி அமைப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் நிலைப்பாடு மற்றும் திட்டங்களை மக்களிடம் வலியுறுத்தும் நோக்கத்தோடு கெஜ்ரிவால் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
கோவா சட்டசபையில் 40 எம்.எல்.ஏ.க்களில் ஆம் ஆத்மிக்கு தற்போது இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் கட்சியின் ஆதிக்கத்தை அதிகரிக்கவும், மாவட்ட மட்டத்தில் வலுவான நிலைப்பாட்டை உருவாக்கவும் இந்த சுற்றுப்பயணம் முக்கியமானதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.