டெல்லி: பீகாரில் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் 7.24 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. பெயர்கள் விடுபட்டவர்களுக்கு கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க செப்டம்பர் 1-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், பீகாரில் சிறப்பு திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சிறப்பு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்ட பின்னர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடுமையான திருத்தத்திற்குப் பிறகு பீகாரில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடியாகக் குறைந்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு முன்பு, ஜூன் 2024-ல் பீகாரில் 7.89 கோடியாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6% குறைந்துள்ளது. அதே நேரத்தில், பட்டியலில் 21.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பீகாரில் 3 மாதங்களாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் காரணமாக 68.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.