அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண் சுப்பிரமணியன், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு அமெரிக்கா முழுவதும் பெரும் விவாதமாக மாறியுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற சிறப்பு இவருக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோ பைடன் அவரை நியமித்தபோது, அருண் சுப்பிரமணியன் அமெரிக்க வரலாற்றில் முதல் தெற்காசிய நீதிபதியாக உயர்ந்தார். மோசடி வழக்குகளில் பில்லியன் கணக்கில் நிதி மீட்டெடுக்க இவரது பணி உதவியாக இருந்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கொள்கையில் பல்வேறு வழக்குகளை கையாண்டு அவர் பல முறை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். குறிப்பாக வழக்கு நடந்தபோது பாதுகாப்பு துறை ஆலோசகரின் அவதூறு பேச்சை நேரடியாக கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் பிறந்த அருண் சுப்பிரமணியனின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை சுப்பிரமணியன் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றினார். தாய் சுந்தரி, மனைவி சவுமியாவுடன் அவர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். அவர் 2014ஆம் ஆண்டு வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னோடித் தமிழர் விருதையும் பெற்றுள்ளார். கல்வி துறையில் சிறந்து விளங்கி, ஓகியோவில் இளங்கலை பட்டமும், கொலம்பியாவில் சட்ட முனைவர் பட்டமும் முடித்துள்ளார்.
அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், நியூயார்க் நீதிமன்றம் மற்றும் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் சட்ட எழுத்தராக பணியாற்றிய அனுபவம் அவரை வலுவான நீதிபதியாக மாற்றியது. நீதித்துறையில் சிறந்து விளங்க இவரது பணி தொடர்ந்து பாராட்டப்படுகிறது. தற்போது அவர் வழங்கிய சீன் டிடி கோம்ப்ஸ் வழக்குத் தீர்ப்பு உலகளவில் விவாதத்துக்குரியதாகி, நீதியின் அடையாளமாக குறிப்பிடப்படுகிறது.