புதுடில்லி: விடுதலை போராட்ட வரலாற்றில் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த திருப்பூர் குமரனும் சுப்பிரமணிய சிவாவும் தேசப்பற்று, ஒற்றுமை, தியாகம் ஆகியவற்றின் சின்னங்களாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இவர்களின் பங்களிப்பு தேசத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாரத மாதாவின் இரு தவப்புதல்வர்களாக தமிழகத்தில் பிறந்த இம்மாமனிதர்கள், இந்தியாவின் சுதந்திரத்திற்காக உன்னதமான தியாகங்களைச் செய்தவர்கள். இறுதி மூச்சுவரை தேசியக் கொடியை ஏந்திய திருப்பூர் குமரனின் துணிச்சல், சுப்ரமணிய சிவாவின் எழுத்து மற்றும் தீவிர உரைகள், இளைஞர்களின் மனதில் தேசப்பற்றை விதைத்தன. இவர்களின் செயல்கள் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தின.
தேசியக்கொடியை தாங்கியபடி உயிர் தியாகம் செய்த திருப்பூர் குமரன், தன்னலமற்ற தியாகத்தின் அடையாளமாகவும், கலாச்சாரப் பெருமிதத்தை எழுப்பிய சுப்பிரமணிய சிவா, எழுத்தின் மூலம் புரட்சியை உந்தியவராகவும் வரலாற்றில் நிறைந்துள்ளனர். இவர்களின் வாழ்க்கை, இன்றைய தலைமுறையினருக்கு தேசப்பற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.
தேச ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் நோக்கி நாம் அனைவரும் செல்லும் வழியில், இவ்விரு வீரர்களின் நினைவு எப்போதும் நமக்குப் பேருத்வேகம் தரும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். சுதந்திரத்தின் அர்த்தத்தை உணர்த்தி, தேசப்பற்று விதைத்த இவர்களின் பாதை, எதிர்காலத்திலும் இந்தியர்களின் மனதில் நிலைத்திருக்கும்.