சென்னை: கோலிவுட்டில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக விளங்கி வரும் திரிஷா, இன்னமும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமான அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட அனைவருடனும் நடித்துவிட்டார். சமீபத்தில் தக் லைஃப் படம் தோல்வியடைந்தாலும், திரிஷா தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

ஒரு கட்டத்தில் அவரது கரியர் தடுமாறியது. ஆனால் 96 திரைப்படம் பெரும் வெற்றியைத் தந்ததால் மீண்டும் முன்னணி நடிகை என்ற இடத்தைப் பெற்றார். அதன் பிறகு பொன்னியின் செல்வன், லியோ, குட் பேட் அக்லி, விடாமுயற்சி போன்ற பல படங்களில் நடித்தார். இவரின் அழகும் திறமையும் குறையாததால், ரசிகர்கள் மத்தியில் இன்னும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
திருமணத்தைப் பற்றியும் அவர் பலமுறை பேசியுள்ளார். வயது 40 கடந்தும் இன்னும் திருமணம் செய்யாத நிலையில், “சரியானவர் வந்தால் திருமணம் செய்வேன், இல்லையெனில் தனியாக இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இதே சமயம் அவர் அளித்திருந்த ஒரு பழைய பேட்டி தற்போது வைரலாகிறது. அதில், “நான் சி.எம் ஆக வேண்டும். என்னை முதலில் ஓட்டு போட்டு வெல்லவையுங்கள். பத்து வருடங்களில் பாருங்கள்” என்று அவர் உறுதியாகக் கூறியிருந்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள், “திரிஷாவுக்கு அப்போவே அரசியல் ஆசை இருந்தது போல. தலைவியை சீக்கிரம் கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். நடிகை தனது நடிப்பால் மட்டுமல்ல, அரசியல் பக்கம் குறித்த விருப்பம் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.