சென்னை: மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் முதன்முறையாக வேலை தேடுபவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது என்று வருங்கால வைப்பு நிதியின் சென்னை மண்டல அதிகாரி சங்கர் தெரிவித்தார். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) பிராந்திய அலுவலகம் சார்பாக பிரதான் மந்திரி விக்ஷீ பாரத் ரோஜ்கர் யோஜனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேவி பிரசாத் பட்டாச்சார்யா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், EPFO ஓய்வூதியம், காப்பீட்டு சலுகைகள், சமூக பாதுகாப்பு சலுகைகள், டிஜிட்டல் சேவைகள் குறித்து விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கால வைப்பு நிதியின் சென்னை மண்டல அதிகாரி சங்கர் கூறியதாவது:-

சென்னை மற்றும் புதுச்சேரி பிராந்திய அலுவலகங்களின் கீழ் உள்ள அதிகாரிகள் பிரதமரின் விக்ஷித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தை செயல்படுத்த இணைந்து பணியாற்றி வருகின்றனர். முக்கியமான தொழில்துறை மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ள இடங்களில் இதை நாங்கள் செயல்படுத்துகிறோம். இதன் மூலம், தொழிலதிபர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளைச் சந்தித்து இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்து விவாதிக்கிறோம்.
புதிதாக PF-ல் சேரும் ஊழியர்களுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கிறோம். மத்திய அரசின் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் முதல் முறையாக பணியில் சேருபவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான பதிவு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடந்து வருகிறது. புதிதாக வேலை செய்பவர்கள் தங்கள் ஆதார் மற்றும் UAN-ஐ இணைப்பதன் மூலம் 6 மாதங்களுக்குப் பிறகு முதல் தவணையாக ரூ.7,500 பெறலாம்.
மீதமுள்ள தொகை ஒரு வருடம் பணிபுரிந்தால் வழங்கப்படும். ATM கார்டு மூலம் PF தொகையை எடுக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. PF திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 6 வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மூலமாகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.