மாஸ்கோ: அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமான தளத்தை பயன்படுத்த முயற்சிக்கையில், ரஷ்யா அந்த நாட்டின் நிலத்தை மூன்றாம் தரப்பு நாடுகள் பயன் படுத்த அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 2021ல் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. ரஷ்யா மட்டும் கடந்த ஜூலை முதல் இந்த நிர்வாகத்தை அங்கீகரித்தது.

ரஷ்யா தலைமையிலான ‘மாஸ்கோ பார்மட் கன்சல்டேசன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான்’ அமைப்பில் ஆப்கானிஸ்தான், ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்கள் ஆக உள்ளனர். இதன் 7வது ஆலோசனைக் கூட்டம் மாஸ்கோவில் நடந்தது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இதன் தலைமையை வகித்தார்.
கூட்டத்தில் ரஷ்யா வெளியிட்ட பரிந்துரை: பிராந்திய பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய, தலிபான் அரசு அரசியல் செயல்முறைகளில், பலதரப்பு செயல்பாடுகளில் மற்றும் கூட்டு பொருளாதார திட்டங்களில் ஈடுபட வேண்டும். எந்த மூன்றாம் தரப்பு ராணுவ உள்கட்டமைப்பையும் பிராந்தியத்தில் நிலைநிறுத்த அனுமதிக்கமாட்டோம். இது ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
மேலும் ரஷ்யா மனிதாபிமான உதவிகளை அரசியல் நிபந்தனைகள் இல்லாமல் வழங்கும் என்று தெரிவித்தது. இக்கூட்டத்தில் தலிபான் நிர்வாகத்தின் சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் அமீர் கான் முட்டகி கலந்து கொண்டார். உயர்மட்ட பிரதிநிதர்களும் உறுப்பு நாடுகளையும் சார்ந்து கலந்துகொண்டனர்.