நாடு முழுவதும் அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதால் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே அதிகாரிகள், ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், பட்டாசு, ரசாயனங்கள், பெட்ரோல், டீசல் போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விதிகளை மீறிய பயணிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் முறையாக தடையை மீறிய பயணிகளுக்கு ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறல் இடம்பெற்றால், 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.5,000 அபராதம் வரை விதிக்கப்படலாம். ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் வியாபாரிகள், பாதுகாப்பான முறையில் பயணித்து, தடையை மீறாமல் ரயிலில் வெடிகள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லாமல் தவிர்ப்பது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.