சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு “அரசன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான இந்த தலைப்பு அறிவிப்புக்கு ரசிகர்கள் கலவையான எதிர்வினை அளித்திருந்தாலும், தரமான சம்பவம் உருவாகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிம்பு தற்போது தனது சிறந்த திரைபடங்களின் வரிசையில் இருக்க, இப்படம் அவருக்கு ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறனும் சிம்புவும் “வடசென்னை” காலத்திலேயே இணைந்து வேலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அப்போது சிம்புவின் தனிப்பட்ட காரணங்களாலும், திட்ட மாற்றங்களாலும் அது நடக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து, இப்போது இருவரும் “வடசென்னை யுனிவர்ஸ்” உலகுக்குள் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
“அரசன்” படத்தை பிரமாண்டமாக தயாரிப்பவர் கலைப்புலி எஸ். தாணு. இவர் முன்பு தயாரிக்க இருந்த “வாடிவாசல்” நிறுத்தப்பட்ட நிலையில், இந்த புதிய கூட்டணி உருவாகியுள்ளது. வெற்றிமாறனின் இயக்கத்தில் தாணுவின் தயாரிப்பும், சிம்புவின் நடிப்பும் சேர்ந்தால் தரமான படைப்பு வெளிவரும் என்பதில் திரைத்துறை நம்பிக்கையுடன் இருக்கிறது.
படத்தின் ப்ரோமோ ஷூட் முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு ரெட்ரோ காஸ்ட்யூமில் கையில் அரிவாளுடன் மாஸ் லுக்கில் தோன்ற, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். “வடசென்னை 2 அல்ல, ஆனால் அதே யுனிவர்ஸில் வரும் புதிய சம்பவம்” என வெற்றிமாறன் உறுதி செய்துள்ளதால், எதிர்பார்ப்பு வானளவாக உயர்ந்துள்ளது.