தஞ்சாவூர்: வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் தொழில் துவங்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது என தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) இர.சுதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை போன்றவற்றில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளுடன் ஆரம்பிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேளாண் சார்ந்த விளைபொருட்களின் சேமிப்பு காலத்தினை அதிகப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், புதுமையான வேளாண் இயந்திரங்களை உருவாக்குதல் போன்ற ஸ்டார்ட் அப் தொழில் தொடங்குவதற்கு இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். நேரடியாக உண்ணும் உணவுப் பொருட்கள் (Ready To Eat) தயாரிப்பதற்கு இத்திட்டம் பொருந்தாது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தக இயக்கம் நிறுவனம், அல்லது ஸ்டார்ட் அப் இந்தியாவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் அந்நிறுவனம் கம்பெனி சட்டம் 2013 அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண் மையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். கூடுதலாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியான லாபம் ரூ 5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் புதிதாக தொழில் துவங்க ஒரு நிறுவனத்திற்கு ரூ 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு தொழிலை விரிவுபடுத்தி, சந்தை படுத்திட ஒரு நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தினை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் அலுவலக
தொலைபேசி எண்-04362-256628 ஐ அணுகலாம்” என்றார்.