கேன்பெராவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பல்வேறு பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இருநாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர். இதன் மூலம், இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுகிறது.

அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்ற ராஜ்நாத் சிங், கேன்பெரா பார்லிமென்ட் வளாகத்தில் பாரம்பரிய வரவேற்பை பெற்றார். பின்னர், ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய சவால்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.
இந்திய பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி, தொழில்நுட்ப திறன் மற்றும் உலகளாவிய பங்களிப்பு பற்றி ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். “சுதந்திரமான மற்றும் நிலைத்தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக நாங்கள் இணைந்து செயல்படுவோம்” என்று அவர் வலியுறுத்தினார். அதேபோல், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுடனும் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருதரப்பு உறவு, நம்பிக்கை மற்றும் அமைதியான பிராந்திய வளர்ச்சிக்கான அடித்தளத்தில் தொடர்ந்து வலுப்பெறும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர். இது இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நீண்டகால பாதுகாப்பு உறவை மேலும் உறுதிப்படுத்தும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.