டாக்கா: வங்கதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 72 வயதான ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்களின் பின்னர் பதவியை ராஜினாமா செய்து இந்தியாவுக்கு தஞ்சம் அடைந்திருந்தார். தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி செய்கிறது.

அவாமி லீக் ஆட்சி காலத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போனவர்களின் வழக்குகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதன் அடிப்படையில், நீதிபதி கோலாம் மோர்டுசா மொஜூம்தர் தலைமையிலான மூவர் குழு ஷேக் ஹசீனாவை முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளது. அதனையடுத்து, ஹசீனாவை உள்ளடக்கிய 29 பேருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஹசீனா வங்கதேசத்தில் இல்லாததால், சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் அக்.22 ஆம் தேதி குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது வங்கதேச அரசியல் சூழ்நிலைக்கு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம், ஹசீனாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும் என அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மறுபுறம், இடைக்கால அரசு “நீதி நிலைநாட்டும் முயற்சியே இது” என வலியுறுத்துகிறது. வரவிருக்கும் 2026 பொதுத் தேர்தலை முன்னிட்டு வங்கதேசம் மீண்டும் பரபரப்பான நிலையை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.