கேன்பெரா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, இரு நாடுகளின் பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தங்கள் இரு ராணுவப் படைகள் இணைந்து செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றன.

அரசு பயணத்தின் போது, ராஜ்நாத் சிங் பார்லிமென்ட் வளாகத்திற்கு சென்றார், அங்கு பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு ஆஸ்திரேலிய துணை பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸுடன் சந்தித்து, இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இதில் சைபர் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் பிராந்திய சவால்கள் குறித்து முக்கியமான கலந்துரையாடல் நடந்தது.
இந்த சந்திப்பில் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்புத் துறையின் முன்னேற்றம் மற்றும் உலகளவில் இந்தியாவின் உயர்தர பாதுகாப்பு தொழில்நுட்ப திறனை எடுத்துரைத்தார். சுதந்திரமான மற்றும் நெகிழ்வான இந்தோ–பசிபிக் பிராந்தியத்திற்காக இரு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதி செய்தார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இருதரப்பு உறவு வலுப்பெறுவதாகவும், இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் நம்பிக்கை மற்றும் அமைதியை நிலைநாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தங்கள் இந்தியா–ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு பாதுகாப்பு உறவின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. இரு நாடுகள் இணைந்து செயல்பட்டு, பிராந்திய சவால்களை சமாளிப்பதில் மேலும் வலுவான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகும். இது, இந்தியாவின் பாதுகாப்பு முனைப்பையும், உலகளவில் நம்பகமான அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது.