மதுரை: தென்மாவட்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்பு! மதுரையில், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய சர்வதேச தரத்திற்கேற்ப கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி திறந்து வைக்கிறார். இது, மதுரையிலும் அருகாமையில் உள்ள தென்மாவட்டங்களிலும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதையை திறக்கிறது.

தமிழ்நாட்டில் திறமையான இளம் வீரர்கள் இருந்தாலும், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணமாக அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த பலதூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, தங்களது வளாகத்தில் இந்த அதிநவீன கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளது. இது, உள்ளூர் வீரர்கள் உயர்தர பயிற்சி பெறவும், முக்கிய போட்டிகளில் பங்கேற்கவும் ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.
‘வேலம்மாள் கிரிக்கெட் மைதானம்’ என பெயரிடப்பட்ட இந்த மைதானத்தில் ஐந்து தரமான ஆடுகள் (Turf Wickets), சக்திவாய்ந்த LED விளக்குகள் மற்றும் சுமார் 5,000 பார்வையாளர்களுக்கான கேலரிகள் உள்ளன. சர்வதேச தரத்திற்கேற்ப ஓய்வறைகள், பத்திரிகையாளர் அறைகள் போன்ற அனைத்து நவீன வசதிகளும் இதன் பகுதியாக அமைந்துள்ளன. இந்த மைதானம், தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) மற்றும் ரஞ்சி டிராபி போன்ற முக்கிய உள்நாட்டு போட்டிகளுக்கான இடமாகவும் அமையும்.
தல தோனி கையால் திறப்பானது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பினை ஊட்டுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக, தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தோனி, இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகம் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். இந்த புதிய மைதானம், தென்மாவட்ட கிரிக்கெட் மேம்பாட்டுக்கு ஒரு மிகப்பெரும் செழிப்பாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.