சென்னை: நடிகர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில், அவரின் தரப்பில் டிஜிபியிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளன. “கிரீன் காரிடார், வேகத்தடைகள் அகற்றம், பத்திரிகையாளர்கள் தடை” என விஜய் சார்பில் கூறப்பட்ட நிபந்தனைகள் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனைப் பார்த்து, அனுமதி மறுக்கப்படச் செய்யும் நோக்கத்தோடு இக்கோரிக்கைகள் வைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை விஜய் இன்னும் நேரில் சந்திக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன் பின்னணியில் விஜய் கரூர் செல்வதற்கான மனு டிஜிபியிடம் சென்றது. ஆனால் அதிலுள்ள கோரிக்கைகள் “நான் தனி விமானத்தில் வருவேன், வழியிலுள்ள சிக்னல்கள் கிரீனாக இருக்க வேண்டும், வேகத்தடைகள் இருக்கக் கூடாது, பத்திரிகையாளர்கள் வரக்கூடாது” என்ற அளவுக்கு சென்றதால், அரசியல் விமர்சகர்கள் இதை ‘அளவுக்கு மீறியது’ என கூறுகின்றனர்.
‘கிரீன் காரிடார்’ என்பது பொதுவாக மூளைச்சாவு நோயாளிகளின் உடல் உறுப்புகளை மாற்றிச் செல்லும் போது பயன்படுத்தப்படும் அவசர வழி. அதே நடைமுறையை விஜய் தன் பயணத்துக்காக கோரியிருப்பது சாத்தியமற்றது என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. “அரசியல் பதவி இல்லாத ஒருவருக்காக இத்தகைய வசதி கேட்பது தவறான முன்னுதாரணம்” எனவும் பலர் விமர்சிக்கின்றனர்.
டிஜிபி அலுவலகம் “இந்த விவகாரம் மாவட்ட எஸ்பியை அணுகலாம்” என்று பதிலளித்துள்ளதாக தகவல். அரசியல் விமர்சகர்கள், “ஒரு கட்சியின் தலைவராக சொல்லிக்கொள்பவர் தன் தொண்டர்களை கட்டுப்படுத்தாமல், அரசு மீது அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது சரியா?” என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், விஜயின் நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக எந்த பாதையை எடுக்கப்போகின்றன என்பதை மக்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.