புதுடில்லி: கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆன்லைன் சூதாட்ட வழக்கில், அமலாக்கத் துறை நேற்று ரூ.50 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட காங். எம்.எல்.ஏ. வீரேந்திராவுடன் தொடர்புடையதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சித்ரதுர்கா தொகுதியைச் சேர்ந்த வீரேந்திரா தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பல ஆன்லைன் சூதாட்ட தளங்களை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத் துறை நேற்று சித்ரதுர்கா மாவட்ட சல்லகெரே பகுதியில் சோதனை நடத்தியது. அப்போது, இரண்டு லாக்கர்களில் இருந்து 40 கிலோ தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் ரூ.50 கோடி மதிப்புடையவை என தெரிவிக்கப்பட்டது. தங்கத்தின் உரிமையாளர் குறித்த விவரம் இன்னும் வெளிப்படவில்லை.
இதே வழக்கில் இதற்கு முன்பே 21 கிலோ தங்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட ரூ.103 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.
#