கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நடிகர் மற்றும் கட்சி உறுப்பினரான தாடி பாலாஜி, திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார். விஜய் இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி, மிகுந்த வருத்தத்தில் உள்ளார் என்று தெரிவித்தார். அவர் விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திப்பார் என்றும் உறுதியளித்தார்.

தாடி பாலாஜி மேலும் கூறுகையில், “இந்தச் சம்பவம் ஒரு சாதாரண விபத்தாக அல்ல, பின்னணியில் சிலர் திட்டமிட்ட சதி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. விஜய் நிகழ்ச்சியின் இடத்தைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய குறுகிய தெருவில் நிகழ்ச்சி நடத்துவதற்கான முடிவை எடுத்தது ஏற்பாட்டாளர்கள்தான். கூட்டம் அதிகமாகும் எனத் தெரிந்திருந்தால் பாதுகாப்பான இடம் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம்,” என்றார்.
அவர் தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரடியாக குறிவைத்து விமர்சித்தார். “தலைமைக்கு நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். பதவியில் இருக்கிறதாலே போதாது; தலைவருக்கு உண்மையாக ஆலோசனை வழங்க வேண்டும். கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் தனது செலவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். ஆனால் அவருக்கு ஆதரவாக கட்சி தலைமை நிற்கவில்லை. இது மிகப்பெரிய தவறு,” என்று கடுமையாகக் கூறினார்.
தாடி பாலாஜியின் இந்த கருத்துகள் தற்போது தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகள் குறித்து கட்சியின் உள் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் மூலம் கரூர் சம்பவம் ஒரு அரசியல் மற்றும் நிர்வாக அதிர்ச்சியாக மாறியுள்ளது. விஜய் தன் கட்சியின் உள் ஒழுங்கை மீண்டும் பரிசீலிக்க நேரிடும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.