சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 2000ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தை தொடங்கிய அவர், 2013ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற மலையாளப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்து, அதன்மூலம் ரசிகர்களிடையே விரைவாக பிரபலமானார்.
தனுஷ், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிஷ்யம்முரா என்ற நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் தனது வாழ்க்கையின் மிகுந்த உணர்ச்சி பூர்வமான பகுதியை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது: “என் கணவர் ஆண்டனி தட்டில், பள்ளிக்காலத்திலிருந்தே எனக்கு நண்பர். அதே சமயம் எங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நாங்கள் உறவை வெளிப்படுத்தாமல் இருந்தோம். ஆனால், எங்கள் காதல் உறவு 15 ஆண்டுகளாக நீடித்தது. ஐந்து ஆண்டுகள் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமலேயே நாங்கள் அந்த உறவை நம்பிக்கையுடன் பேணி வந்தோம்.” என தெரிவித்தார்.
“என் அப்பாவிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன் என் காதல் விஷயத்தை சொன்னேன். அவர் கோபப்படாமல் ‘உனக்குப் பிடித்திருந்தால் போதும்’ என்றார். அந்த வார்த்தை எனக்கு பேருதவி ஆனது. இறுதியில் இருவீட்டினரும் இணைந்து எங்கள் திருமணத்தை நடத்தினர். எங்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் அமைதியாக நடந்தது,” என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். தற்போது அவர் விஜய் தேவரகொண்டா இணைந்து நடிக்கும் ரவுடி ஜனார்தன் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.