மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. மூன்று நிமிடங்களுக்கு மேல் நீளமான இந்த வீடியோ, கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு சமூக-அரசியல் சாயலில் உருவாகியுள்ளது. டிரெய்லரில் துருவ் விக்ரம் காட்டிய நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் தனது தனித்துவமான ஸ்டைலில் கதை சொல்லும் முறை, வசனங்கள், மற்றும் பின்னணி இசை ஆகியவை டிரெய்லரை மேலும் சிறப்பாக்கியுள்ளன.

பைசனில் துருவுடன் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் மற்றும் அமீர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பசுபதி கூறும் வசனங்கள் சமூகநீதியின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளன. “நம்மளை மாதிரி ஆளுங்க புத்தியை தூக்கி முன்னாடி வைக்கலன்னா…” என தொடங்கும் வசனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தென் தமிழக கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படம், மாரி செல்வராஜின் கதை சொல்லும் ஆழத்தையும் துருவின் திறமையையும் இணைத்து, தீபாவளி ரிலீஸாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
வாழை படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜ் மீண்டும் ஒரு சமூகச் செய்தியுடன் வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பைசன் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் உள்ளது. இந்த ஆண்டின் தீபாவளி கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் பைசன் படம் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி.