தளபதி விஜய் ஜனநாயகன் திரைப்படத்திற்குப் பிறகு முழுமையாக அரசியலுக்குள் நுழையவுள்ளார். தற்போது அந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், சினிமாவில் இருந்து விலகப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. இதே சமயத்தில், சில இயக்குநர்கள் விஜய்க்காக கதைகளை தயார் செய்திருந்ததாகத் தகவல் வந்துள்ளது. அவர்களில் ஒருவர் வாரிசு பட இயக்குநர் வம்சி.

வம்சி, வாரிசு படப்பிடிப்பின் போது விஜய்க்காக இன்னொரு கதையை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரை அந்தக் கதையை விஜய்யிடம் சொல்ல முடியாமல் போனதாக கூறப்படுகிறது. விஜய் தற்போது அரசியலுக்குள் நுழைந்ததால், அந்தக் கதையை அவரை வைத்து எடுக்க முடியாது என்ற நிலையில் வம்சி, அந்தக் கதையை பாலிவுட் ஹீரோ ஒருவரிடம் கூறியுள்ளார்.
அந்த ஹீரோ வேறு யாருமல்ல, சல்மான் கான் தான். வம்சி எழுதிய கதையை கேட்ட சல்மான் கானுக்கு அது மிகவும் பிடித்ததாகவும், அந்தக் கதையை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க வம்சியை அழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், இந்த கூட்டணி உறுதியாகும் என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
வாரிசு படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வம்சி இன்னும் தனது அடுத்த திட்டத்தை தொடங்கவில்லை. ஆனால் இந்தச் செய்தியுடன், அவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. விஜய்க்காக எழுதப்பட்ட கதை சல்மான் கானின் திரையில் உருவாகப் போகிறது என்ற செய்தி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.