புதுடில்லி: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) இந்தியா மீண்டும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பெருமை பெற்றுள்ளது. 2026 முதல் 2028 வரை மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா இந்த முக்கியமான அமைப்பில் உறுப்பினராகப் பணியாற்ற உள்ளது.
இந்தியா கடந்த காலங்களில் மனித உரிமைகள் பாதுகாப்பிலும், அடிப்படை சுதந்திரங்களின் முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற சமீபத்திய கூட்டத்தில், பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவுக்கு வாக்களித்தன. இதன் மூலம் உலக நாடுகள் இந்தியாவின் நம்பகமான மற்றும் சமநிலையான நெறிமுறைகளுக்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் தமது பதிவில், “இந்த வெற்றி, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கு இந்தியா அளித்து வரும் உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நமது பதவிக்காலத்தில் இதே நோக்கத்துடன் செயல்பட்டு, உலக அமைதி மற்றும் நீதிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்பாடுகளை இந்தியா ஐநாவில் கடுமையாக சுட்டிக்காட்டிய சமயத்திலேயே இத்தேர்வு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரல் மேலும் வலுப்பெறுவதை குறிக்கிறது.