சென்னையில் டப்பிங் யூனியனில் உருவான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டப்பிங் கலைஞர் சங்கீதா, சாஜி என்பவர் தன்னிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியதுடன், அதுகுறித்து யூனியன் செயலாளர் கதிரவன் பாலுவிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார். ஆனால், புகாருக்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சட்ட ரீதியில் சென்றால் யூனியனில் இருந்து நீக்கிவிடுவேன் என்று கதிரவன் மிரட்டியதாகவும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ராதா ரவியை எதிர்த்து போட்டியிட்டதற்காக தன்னை யூனியனில் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, யூனியன் செயலாளர் கதிரவன் பாலு இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அவர் கூறியதாவது, “சங்கீதா அளித்த புகார் சாஜி குறித்து மட்டுமே இருந்தது. அதில் 2017 முதல் அவருடன் பணிபுரிந்தபோது ஏற்பட்ட பிரச்சினை என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீடியாக்களுக்கு வழங்கும் ஆதாரங்கள் எங்களிடம் அவர் சமர்ப்பிக்கவில்லை. விசாரணையில் சாஜி ஆஜரானார், ஆனால் சங்கீதா ஆஜராகவில்லை” என்றார். மேலும், சாஜி மீது நடவடிக்கை எடுத்து அவரை நீக்கியதாகவும், விசாரணை நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், சங்கீதா தன்னை 2020ஆம் ஆண்டில் அளித்த புகாருக்காக அல்ல, 2023ஆம் ஆண்டு யூனியனில் தவறான குற்றச்சாட்டுகளை பரப்பியதற்காக நீக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார். “அந்த பெண் கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறு. யூனியனில் எதுவும் மறைக்கப்படவில்லை” என கதிரவன் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பல கேள்விகள் எழுந்தன, சில நேரங்களில் வாக்குவாதமும் ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து நடிகர் ராதா ரவி, “சங்கீதா கூறும் அனைத்தும் பொய்யானவை. யூனியனில் எந்தப் பெண்ணும் அநீதிக்கு உள்ளாக மாட்டார். எல்லாவற்றுக்கும் உரிய விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்தார். தற்போது இந்த சர்ச்சை திரைப்பட துறையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. யூனியன் நிர்வாகம் எதிர்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்குவதாக உறுதியளித்துள்ளது.