அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற “விழிப்புணர்வு, அறிவியல், ஆன்மிகம் மற்றும் உலகளாவிய தாக்கம் 2025” என்ற மாநாட்டில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் ஒரே மேடையில் கலந்துரையாடினர். இந்த நிகழ்வு ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெத் இஸ்ரேல் டீகோனஸ் மையத்தில் நடைபெற்றது. மனித அறிவு, தொழில்நுட்பம் மற்றும் ஆன்மிகம் இணையும் வழியை ஆராயும் விதமாக பல்வேறு விஞ்ஞானிகள் இதில் பங்கேற்றனர்.

சத்குரு தனது உரையில், நாடுகளுக்கு இடையேயான போட்டியால் அல்ல, ஒத்துழைப்பால் தான் விண்வெளி ஆய்வுகளில் பெரும் முன்னேற்றம் காண முடியும் என்று கூறினார். மனிதர்கள் அதிகாரம் பெறும் போதெல்லாம், அதே நேரத்தில் பணிவு மற்றும் பரிவு வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இல்லையெனில், மனித குலம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் அபாயம் அதிகரிக்கும் எனவும் சத்குரு எச்சரித்தார்.
மேலும், நமது வேறுபாடுகளை விண்வெளிக்குக் கொண்டு செல்லக் கூடாது என அவர் சுட்டிக்காட்டினார். “நாம் கருப்பா, வெள்ளையா, ஆணா, பெண்ணா, இந்தியனா அல்லது அமெரிக்கனா என்ற அடையாளங்களை விட்டு விலகி, மனிதனாகவே விண்வெளியை அணுக வேண்டும். விண்வெளி ஆராய்ச்சி என்பது ஒரே ஒரு தேசத்தின் பெருமை அல்ல; அது மனித குலத்தின் அறிவுக்கான ஏக்கம்,” என்றார் சத்குரு.
சுனிதா வில்லியம்ஸும் இதனை ஒப்புக் கொண்டு, “விண்வெளி மனிதனின் எல்லைகளை மீறிய அரங்கம்; அதில் ஒற்றுமையும் பொறுமையும் முக்கியம்,” என்று கூறினார். அவர்களின் உரையாடல் உலகளாவிய ஒற்றுமையையும் அறிவியலின் நெறிமுறையையும் வலியுறுத்தும் வகையில் சிறந்ததாக அமைந்தது.