கேரளா: வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு மட்டுமல்ல, கனரக இயந்திர ஆபரேட்டர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மாநில சுகாதாரத் துறை, தனது உளவியல் பிரிவின் மூலம், நிலச்சரிவின் போது பணி செய்யும் ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.
300-க்கும் மேற்பட்ட கனரக இயந்திர ஆபரேட்டர்கள் பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, ஜார்கண்ட், ஒடிசா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து வந்துள்ளனர். இதற்கான ஆலோசனைகள் பல்வேறு மொழிகளில் வழங்கப்படுகின்றன. மனநலப் பாதுகாப்பு வழங்கும் செயல்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களின் சேவைகளும் கிடைக்கின்றன. மேலும், சுகாதாரத் துறையின் அனுமதியின்றி யாரும் முகாம்களில் நுழைந்து ஆலோசனை வழங்கக் கூடாது என்றும் அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெலி-கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. இந்த சேவை தேவைப்படும் மக்கள் பின்வரும் எண்களில் தொடர்புகொண்டு உதவி பெறலாம்: 9288099587, 9288004981, 9288008981.