இந்தியாவில் உருவாக்கப்பட்ட சுதேசி செயலிகள் தற்போது வெளிநாட்டு செயலிகளுக்கு வித்தியாசமான சவாலை உருவாக்கி வருகின்றன. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக பிரச்சனைகள் தொடங்கியதும், இந்தியர்களிடையே சுதேசி உணர்வு அதிகரித்தது. இதன் விளைவாக, இந்தியர்களால் உருவாக்கப்பட்ட செயலிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அரட்டை செயலி பெரும் வெற்றியை கண்டபோல், தற்போது மேப் மை இந்தியா நிறுவனத்தின் மேப்பிள்ஸ் செயலியும் அதே வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது.

இந்த மேப்பிள்ஸ் செயலி, கூகுள் மேப்புக்கு நேரடி போட்டியாக உருவாகி வருகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், இது முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரங்களில் காணப்படும் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற சிக்கலான இடங்களைக் கூட தெளிவாக காட்டும் 3டி காட்சிகள் இதில் உள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியால், நெரிசல் இல்லாத மாற்று வழிகளை உடனுக்குடன் பரிந்துரைக்கும் வசதி கொண்டது.
இந்த செயலி பயணிகளுக்காக பாதுகாப்பான எச்சரிக்கைகளையும் வழங்குகிறது. விபத்து அடிக்கடி நிகழும் இடங்கள், வேகத் தடைகள் மற்றும் பள்ளங்கள் போன்ற இடங்களில் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் திறன் கொண்டது. இதேபோல், டோல் கட்டணங்களை கணக்கிடும் கால்குலேட்டர் வசதி இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பயணிக்க முன்பே சுங்கச்சாவடி எண்ணிக்கை, செலவு மற்றும் குறைந்த செலவு மாற்று வழிகள் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்படுகின்றன.
மேப்பிள்ஸ் செயலியின் மற்றொரு சிறப்பு, உங்கள் இருப்பிடத்தை வெறும் ஆறு எழுத்துகள் அல்லது எண்களால் பகிர முடிவது. இதனால் நீண்ட முகவரிகளை நினைவில் கொள்ள தேவையில்லை. ஹைப்பர் லோக்கல் நேவிகேஷன் வசதி காரணமாக துல்லியமான வீடு அல்லது கட்டிடம் வரை வழிகாட்ட முடிகிறது. இவ்வளவு மேம்பட்ட அம்சங்களுடன், மேப்பிள்ஸ் செயலி நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்யும் நிலையில் உள்ளது. இதன் அசுர வளர்ச்சி, கூகுள் மேப்புக்கு இந்தியாவின் வலுவான பதிலாக மாறியுள்ளது.