சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், அவர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்கான நிதி இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி திமுக அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், அரசுத் துறைகளில் உள்ள 3. 5 லட்சம் காலிப்பணியிடங்கள் தமிழக இளைஞர்களால் நிரப்பப்படும் என்ற வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவரைக் கூட இன்று வரை நியமிக்க முடியாத சூழலில்தான் தள்ளாடிக் கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் நன்கறிவர். எனவே இந்த முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.