சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலை குறித்து பாஜக பிரமுகரும் நடிகையுமான கஸ்தூரி முக்கிய கருத்து தெரிவித்துள்ளார். “விஜய் தற்போதைய சகவாசத்தை கட் பண்ணி, புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியது. இதனையடுத்து, தவெக நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. வழக்கின் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல், கரூரில் விஜய் நேரில் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் விஜய் இதுவரை அந்தப் பகுதியில் வராதது விவாதமாகியுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் தரிசனம் செய்த கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர் மக்களுக்குள் விஜய் மீது இன்னும் நம்பிக்கை உள்ளது. ஆனால் அவரது சுற்றத்திலிருக்கும் சிலர் தான் பிரச்சினைக்குக் காரணம். அவர்களை விலக்கி, சுய முடிவெடுத்து மக்களுக்கான தலைவராக மாற வேண்டும்” என்றார். மேலும், “பவன் கல்யாணை மாதிரி தைரியமான முடிவுகள் எடுக்கணும். ஆட்சி மாற்றத்துக்காக விஜய் களம் இறங்கணும்” என்று கூறினார்.
அவர் மேலும், “திமுக ஆட்சியை அகற்றி, புதிய மாற்றத்தை உருவாக்க விஜய் உறுதுணையாக இருக்க வேண்டும். டிடிவி தினகரன் பாஜகவுடன் நல்ல உறவிலேயே உள்ளார். எடப்பாடியுடனான கருத்து வேறுபாடு மட்டும் தான் பிரச்சினை. வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகும்” எனக் குறிப்பிட்டார். தற்போது விஜயின் அரசியல் நடவடிக்கைகள், புதிய நிர்வாக நியமனங்கள் மற்றும் கூட்டணி முடிவுகள் குறித்து பெரும் ஆர்வம் நிலவி வருகிறது.