புதுடில்லி: டில்லியில் இருந்து நாகலாந்தின் தீமாபூர் நோக்கி புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில் இன்று எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. விமானம் ஓடுபாதையை நோக்கி நகரும் நேரத்தில், ஒரு பயணியின் பையில் வைக்கப்பட்டிருந்த பவர் பேங்க் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் பயந்தும் பதற்றமடைந்தும் அலறினர்.

உடனே விமானப் பணியாளர்கள் திடீர் தீ விபத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டனர். அவர்கள் தீயை விரைவாக அணைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். விசாரணையில், அந்த பவர் பேங்கில் உள்ள லித்தியம் பேட்டரியே தீப்பற்ற காரணமாக இருந்தது என தெரியவந்தது. விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், யாரும் காயமடையவில்லை.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. எந்த தொழில்நுட்ப கோளாறும் இல்லையென உறுதிப்படுத்தியதும், மீண்டும் பயணத்தைத் தொடங்கியது. பயணிகள் சற்றுநேரம் பதட்டத்தில் இருந்தாலும், விமான ஊழியர்களின் விரைவான நடவடிக்கை அவர்களுக்கு நிம்மதியளித்தது.
கடந்த வாரமே ஏர் சீனா விமானத்தில் இதேபோன்று லித்தியம் பேட்டரி காரணமாக தீப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால், விமானங்களில் மின்சாதனங்களின் பாதுகாப்பு சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. பயணிகள் தங்களது மின் சாதனங்களை விமானப் பயணத்திற்கு முன் சரிபார்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.