சென்னை:
சமீபத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பல சாதாரண நுகர்வோர்கள் நேரடியாக தங்கத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சிலர் தனிநபர் கடன்களை எடுத்து தங்கம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இது நிதி ரீதியாக உண்மையில் லாபகரமா?
தங்கம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் தங்கம் வாங்குவது ஒரு மரபாக இருந்து வந்தாலும், தற்போதைய உயர்ந்த விலை இதை சவாலாக்கியுள்ளது. இதனால், பலர் தனிநபர் கடனைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் நிபுணர்கள் இதை கவனமாக அணுக வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

தனிநபர் கடனின் நன்மைகள்
தனிநபர் கடன்களுக்கு எந்த சொத்தும் பிணையாக தேவையில்லை. விரைவாக அங்கீகரிக்கப்படும் இக்கடன்கள் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலத்துடன் கிடைக்கின்றன. சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்தவும் உதவுகிறது. இதனால் எதிர்காலத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறும் வாய்ப்பு உருவாகிறது.
ஆனால் ஆபத்துகளும் உண்டு
தங்கத்தின் விலை எப்போதும் நிலையாக இருக்காது. திடீர் சரிவு ஏற்பட்டால், கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகலாம். மேலும், தனிநபர் கடன்களின் வட்டி விகிதம் தங்கக் கடனை விட அதிகமாக இருக்கும். எனவே, தங்க விலையின் உயர்வு மற்றும் கடனின் செலவை நுணுக்கமாக மதிப்பீடு செய்த பிறகே முடிவு எடுக்க வேண்டும்.
நிபுணர் கருத்து
“தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் சமயத்தில் கடன் எடுத்து தங்கம் வாங்குவது ஆபத்தானது. விலைகள் குறைந்தால் பெரிய நட்டம் ஏற்படும். கடனுடன் முதலீடு செய்வது நிதி ஆபத்தை அதிகரிக்கிறது,” என ஸ்டாக்க்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் லகோடியா கூறுகிறார்.
எனவே, தங்கம் வாங்க கடன் எடுப்பதற்கு முன் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனை ஆராய்வது அவசியம். சரியான திட்டமிடலுடன் மட்டுமே இது ஒரு பாதுகாப்பான முதலீடாக மாறும்.