புதுடில்லி: பிரதமர் மோடி மறைப்பதை டிரம்ப் வெளிப்படுத்துகிறார் என ரஷிய எண்ணெய் கொள்முதல் குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்.
இதுகுறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறும்போது,” ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாகவும் மேலும் கொள்முதலை குறைக்கும்” என்றார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்க போவதில்லை என்று டிரம்ப் மீண்டும் கூறியதற்கு காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மோடி மறைப்பதை டிரம்ப் வெளிப்படுத்துகிறார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி இறுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார். டிரம்ப் தனக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததாக மட்டுமே கூறினார். ஆனால் மோடி எதை மறைத்தாலும், டிரம்ப் வெளிப்படுத்துகிறார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறித்து பேசிய தாகவும் இந்த இறக்குமதி நிறுத்தப்படும் என்று அவருக்கு உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.
முதலில் டிரம்ப்பிடம் இருந்து ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களைப் பெற்றோம். இப்போது அவரிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம். பிரதமர் மோடி எதை மறைக்கிறார்? அவர் எந்த அழுத்தத்தில் இருக்கிறார்? அவர் எதற்கு பயப்படுகிறார்? ஹவ்டி மோடி-நமஸ்தே டிரம்ப் முற்றிலும் கெட்டுப்போனது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.