சென்னை: மற்ற மொழி நடிகர்களை கொண்டுவந்தால் அது பான் இந்தியா படம் ஆகிடாது என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழில் உருவாகும் பான் இந்திய படங்களின் தோல்விக்கான காரணம் குறித்து விஷ்ணு விஷால் பேசியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் மானசா சவுத்ரி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். “எப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
ஆர்யன் படத்தின் புரமோஷனின்போது, விஷ்ணு விஷால் தமிழ் படங்கள் குறித்து விஷ்ணு விஷால் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. “பான் இந்திய அளவில் வெற்றிபெற்ற முதல் படம் தமிழில் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் தான். பான் இந்தியா என்கிற கலாச்சாரத்தையே நாம் தான் தொடங்கினோம். ஆனால் அந்த படத்திற்கு பின் அதே மாதிரியான வெற்றி நமக்கு அமையவில்லை. மற்ற மொழியில் பான் இந்திய வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் அந்த நிலத்திற்கு நெருக்கமான கதைகள்.
ஆனால் நாம் எங்கேயோ நம்முடைய மண்சார்ந்த கதைகளில் இருந்து விலகியிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். காந்தாரா , மஞ்சுமெல் பாய்ஸ் , புஷ்பா , கே.ஜி.எப் ஆகிய படங்கள் எல்லாம் அந்த மொழி ரசிகர்களின் உணர்வுகளுக்காக எடுக்கப்பட்ட படங்களே. ஆனால் தமிழ் படங்களைப் பொறுத்தவரை வெவ்வேறு மொழிகளில் இருந்து நடிகர்களை நடிக்க வைத்தால் அது பான் இந்தியா படம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நான் சொன்ன மற்ற படங்களில் பிற மொழி நடிகர்கள் நடிக்கவில்லை. நாம் நம் மண் சார்ந்த கதைகளை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்”. இவ்வாறு அவர் பேசினார், இவரது இந்த பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது.