தஞ்சாவூர்: நெடுஞ்சாலைத்துறையின் தஞ்சை உட்கோட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களில் மழைநீர் தேங்காமல் செல்லும் வகையில் ஆக்கிரமித்து இருந்த செடி-கொடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்திலும் பலத்தமழை கொட்டியது. இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர் கொள்ளும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற தொடர்ச்சியான ஆய்வுக்கூட்டங்களில் தேவையாள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் ஆலோசனையின் பேரில் தஞ்சை நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை கோட்டப்பொறியாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி தஞ்சை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை உட்கோட்ட பராமரிப்பில் உள்ள மாவட்ட அரசு சாலைகளில் உள்ள பாலங்கள்,சிறு பாலங்களில் வடகிழக்கு பருவமழையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், தண்ணீர் தேங்காமல் பாதிப்பு வராத அளவிற்கு நீர் வழிப்பாதைகள் மற்றும் பாலத்தின் மேற்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது
தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து குளிச்சப்பட்டுக்கு செல்லும் சாலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் உள்ள தரைப்பாலங்களில் ஆக்கிரமித்த செடி. கொடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. 10 – க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பணிகள் நடைபெற்றன.