சென்னை மெட்ரோ 2வது கட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு குறித்த கேள்வி திமுக எம்பி தயாநிதி மாறான் நாடாளுமன்றத்தில் எழுப்பியதாகவும், அதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளதாகவும் தெரிய வருகிறது. திமுக எம்பி, “சென்னை மெட்ரோ 2வது கட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதற்கான காரணம் என்ன? பிற மாநிலங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்ட விதம் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கான பதிலில், மத்திய நகர்ப்புற வளர்ச்சி இணையமைச்சர், “சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டம் மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது. எனவே, இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு தேவையில்லை” என்று கூறியுள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பல மாநிலங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும், மத்திய அரசு வழங்கிய நிதி விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2 நிதியாண்டுகளில், டெல்லி-காசியாபாத்-மீரட் மெட்ரோக்கு ரூ. 43,431 கோடி, பெங்களூர் மெட்ரோவுக்கு ரூ. 7,658 கோடி, மும்பை மெட்ரோவுக்கு ரூ. 4,402 கோடி, கான் பூர் மெட்ரோவுக்கு ரூ. 2,629 கோடி, அகமதாபாத் மெட்ரோவுக்கு ரூ. 2,596 கோடி, மற்றும் கொச்சி மெட்ரோவுக்கு ரூ. 146 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், தற்போது விம்கோ நகர்-சென்னை ஏர்போர்ட் மற்றும் சென்னை சென்ட்ரல்-பரங்கிமலை ஆகிய இரண்டு வழிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுவதுடன், 116 கிமீ தொலைவுக்கு மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை, மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் திட்டம் நடைபெற்று வருகிறது. 2026 முதல் இந்த வசதி படிப்படியாக அமலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.