தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதி கலை அரங்கில் இரண்டாம் கட்டமாக, 309 இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் சி.ராணி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை வகித்து மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொத்தம் 645 தரமான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
மடிக்கணினியைப் பெறுகின்ற மாணவ, மாணவிகள் அதனை பயனுள்ள வகையில் உபயோகிக்க வேண்டும். பின்தங்கிய பகுதியான பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் முதலிடம் பெற வேண்டும். வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த உங்களை நாடி வரவேண்டும். அந்த அளவுக்கு உங்கள் பொது அறிவுத் திறனையும், கல்வி அறிவையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் அனைவரும் மடிக்கணினி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் திமுக சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் செ.ஞானப்பிரகாசம், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வணிகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் நா.பழனிவேலு வரவேற்றார். நிறைவாக, வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர்.அருண்மொழி நன்றி கூறினார்.