விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கேஜேபி டாக்கீஸ் தயாரிப்பில் வெளியான ஆந்தாலஜி திரைப்படமான ‘ஹாட் ஸ்பாட்’ பல சர்ச்சைகளைக் கடந்து, கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்போது, ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது, இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய விஷ்ணு விஷால், “‘ஹாட் ஸ்பாட்’ டிரெய்லர் வெளியான போது, என்ன டிரெய்லர் இது, ஏன் இயக்குநர்கள் இப்படியாக படங்களை எடுக்கிறார்கள் எனக்கு விக்னேஷ் மீது கோபம் வந்தது. அந்த டிரெய்லர் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் படத்தைப் பார்த்த பிறகு, அது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்த தைரியம் எனக்குப் பிடித்தது. தற்போது குழந்தைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவசியம் இருக்கிறது. இந்தப் படத்தை என் மகனுடன் சேர்ந்து பார்த்தேன்.
இந்த புதிய பாகத்தில் இடம்பெற்ற 4வது கதை எனக்கு ரொம்ப பிடித்தது. கண்டிப்பாக மாற்றுக்கருத்தை ஏற்படுத்தும். அதனால் பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை” என்றார். விஷ்ணு விஷால், “நல்ல கதை சினிமா மீது நம்பிக்கையளிக்கிறது. இரண்டாம் பாகம் என்ற தலைப்பைப் பார்த்து ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள், ஆனால் சில படங்கள் சரியாக ஓடுவதில்லை. நானும் இரண்டாம் பாகம் படங்களில் நடிக்கிறேன், அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தொடர்பான வாக்குவாதங்களைப் பற்றி விஷ்ணு விஷால் கூறியதாவது, “நானே நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பதால் எனக்கு இந்தப் பஞ்சாயத்து வரவில்லை. சினிமா மாற்றத்தை நோக்கிச் சென்று வருகிறது, வியாபார முறை மாறிவருகிறது.
என்னைவிடப் பெரியவர்கள் இது தொடர்பாகப் பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள். ஒரு தயாரிப்பாளராக எனக்கே தலை சுற்றுகிறது. நிறைய விஷயங்கள் மாற வேண்டும், தற்போதைய வியாபாரம் தெரிந்து கொண்டு சிலவற்றை மாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.