சென்னை: இறைவனிடத்தில் மனதையும், மதியையும் அர்ப்பணித்து வாழ்ந்திட வேண்டும் என்ற கீத உபதேசத்தை மக்கள் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் சிறப்புகள் அதிகம் கிடைக்கும்.
“அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்று உரைத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், குழந்தைகளை கிருஷ்ணனைப் போல் அலங்கரித்து, வீட்டின் தலைவாசலிருந்து பூஜை மண்டபம் வரை ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தையின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து பதிய வைப்பார்கள்.
கிருஷ்ணருக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள், சீடை, முறுக்கு போன்ற பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வணங்கி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
அனைத்து உயிர்களிடத்தும் நட்பும், கருணையும் உடையவனாய், நான் எனது என்ற பற்று நீங்கி, இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கொண்டு, பொறுமையுடனும், மகிழ்ச்சியுடனும், இறைவனிடத்தில் மனதையும், மதியையும் அர்ப்பணித்து வாழ்ந்திட வேண்டும் என்ற கீத உபதேசத்தை மக்கள் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கும்.