விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் குட்கா, போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி கண்ணன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பதவி வகித்து வந்த பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை தலைமையகத்தில் நிர்வாக பிரிவு உதவி ஐஜியாக பணியாற்றி வந்த டி.கண்ணன், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இன்று (ஆகஸ்ட் 12) காலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும்.
குற்றங்கள் குறையும். அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். அவர் கூறினார். மேலும் காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கிய அவர், “காவல்துறையினர் காவல் பணியில் கண்ணியமாக நடந்து கொள்வது அவசியம்.
காவல் நிலையங்களில் பதிவாகும் கொலை, கொள்ளை, திருட்டு, போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த வழக்குகளை உடனடியாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். உரிமம் இன்றி போலி பட்டாசு தயாரிப்பவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து வெடி விபத்துகளைத் தடுக்கவும், சமுதாயத்தில் நடக்கும் குற்றச் செயல்களைக் குறைக்கவும் தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.