புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த பங்குச்சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த 10ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அதானியின் சகோதரர் வினோத் அதானியுடன் தொடர்புடைய போலி நிறுவனத்தில் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரிய செபி தலைவர் மாதாபி மற்றும் அவரது கணவர் தவல் ஆகியோர் பங்கு வைத்திருந்தனர்.
இதனால் தான் சந்தேகத்திற்கு இடமான நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்று செபி தலைவர் மாதாபி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், பா.ஜ.க , மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது: அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரே ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு பெரிதும் நிதியளித்தார். அவரது தூண்டுதலின் பேரில் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது, தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் ஏஜெண்டாக ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் மோடி மீதுள்ள வெறுப்பின் காரணமாக தாய் நாட்டுக்கு எதிராக ராகுல் செயல்படுகிறார். அரசியல் ஆதாயத்திற்காக சொந்த நாட்டு நலனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. ஹிண்டன்பர்க் விவகாரத்தில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் (94) மீது பாஜக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
ஓபன் சொசைட்டி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் இவர், பல்வேறு நாடுகளின் அரசியலில் திரைமறைவில் செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்காக ஓராண்டில் ரூ.12,000 கோடி வரை செலவு செய்வதாகவும், இந்தியா உட்பட 120 நாடுகளின் அரசியலில் தலையிடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்கு இவர்தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. “சோரோஸ் ஆபத்தான பணக்காரர்” என்று பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.