மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு ஆஸ்திரேலியாவின் லா ட்ரோப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
மும்பையில் பிறந்த ராணி முகர்ஜி, 1997-ம் ஆண்டு ‘ராஜா கி ஆயாகி பாராத்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
‘பிளாக்’, ‘நோ ஒன் கில்டு ஜெசிகா’, ‘ஹிட்ச்கி’ உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘ஹே ராம்’ படத்திலும் அவர் நடித்திருந்தார்.
‘மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் ராணி முகர்ஜி பெற்றார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவை முன்னிட்டு லா ட்ரோப் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இந்திய திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மட்டுமின்றி, மனிதாபிமான உதவிகள் மற்றும் சமூக நலப் பணிகளில் அவர் மேற்கொண்ட பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
