சென்னை: கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.
ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘கண்ணக்குழியா’ பாடலை ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வெளியான இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். படத்தின் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
முதலில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் படத்தின் வெளியீட்டு தேதி ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை இளம் வயது கதாநாயகன் காதலிப்பதை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. ‘ஹாய்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
