கேரளா: கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் தேவன், தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் விஜய்யுடன் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியலிலும் ஈடுபட்டு வரும் தேவன், பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகினார்.
கடந்த 2004-ம் ஆண்டு நவகேரள பீப்பிள்ஸ் பார்ட்டி என்ற கட்சியைத் தொடங்கிய தேவன், 2021-ம் ஆண்டு பாஜகவில் இணைந்ததுடன், தனது கட்சியையும் பாஜகவுடன் இணைத்தார். அவருக்கு கேரள பாஜக மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெற்ற கோவில் நிகழ்ச்சியில் பாஜகவில் இருந்து விலகுவதாக தேவன் அறிவித்தார். மாநில துணைத் தலைவர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார்.
அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், தனது முடிவில் தேவன் உறுதியாக இருந்தார். இதையடுத்து கேரளத்தில் தவெக சார்பில் செயல்பட்டு வரும் சதீஷ் தோந்நய்க்கல், சாலக்குடியில் உள்ள தேவனின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார்.
தேவன் விரைவில் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைய உள்ளதாகவும், அவருக்கு கேரளாவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 10-ம் தேதி சென்னை வந்து விஜய்யை சந்திக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்தச் சந்திப்புக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தேவன் கூறுகையில், தவெகவில் இணைவதற்காக பாஜகவில் இருந்து விலகவில்லை என்றும், ராஜினாமா செய்த பிறகே தவெக தரப்பினர் தன்னை அணுகியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 2004-ம் ஆண்டு தான் முன்வைத்த அரசியல் கொள்கைகளும் விஜய்யின் கொள்கைகளும் ஒன்றுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
