சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நடிகரும் அரசியல்வாதியுமான தேவன், தவெகவில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைவர் விஜய்யை செப்டம்பர் 10-ம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள தேவன், தமிழில் ‘வானத்தைப் போல’, ‘சிட்டிசன்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புடன் அரசியலிலும் ஈடுபட்டு வரும் அவர், 2004-ம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். 2004 மற்றும் 2006-ம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்ட அவர், பின்னர் 2020-ம் ஆண்டு ‘நவ கேரள மக்கள்’ என்ற கட்சியை தொடங்கினார்.
2021-ம் ஆண்டு தனது கட்சியை பாஜகவுடன் இணைத்த தேவன், பாஜக மாநில துணைத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அந்த லட்சியங்களை பாஜகவில் இருந்து செயல்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தவெகவில் இணைய இருப்பது குறித்து தேவன் கூறியதாவது: “நான் பாஜகவில் இருந்து விலகியதை ஊடகங்கள் மூலம் அறிந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சில நிர்வாகிகள் மூலம் தவெகவில் இணைய விருப்பம் உள்ளதா என கேட்டறிந்தார். அவர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக பேசினேன்.
அவர்களின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என தெரிவித்தேன். செப்டம்பர் 10-ம் தேதி அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். கடவுள் அருளால் தவெகவில் இணைவேன்” என்றார்.
விஜய்யுடன் ‘நெஞ்சினிலே’, ‘ஷாஜகான்’, ‘சிவகாசி’ உள்ளிட்ட திரைப்படங்களில் தேவன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
