சென்னை: ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இன்று உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.
திருமணத்தைத் தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வினுஷா தேவி – லிங்கேஸ்வரன் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மாடலிங் முதல் சின்னத்திரை வரை
வினுஷா தேவி ஆரம்பத்தில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தினார். பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்ததுடன், அழகுப் போட்டிகள் மற்றும் போட்டோஷூட்கள் மூலமாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பின்னர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த அவர், கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்ததன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த தொடரில் ரோஷினி ஹரிப்ரியன் விலகியதைத் தொடர்ந்து, கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் வினுஷா நடித்திருந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது மீண்டும் சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.
காதல் திருமணமாக மாறியது
சின்னத்திரையில் வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வினுஷா தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று வினுஷா தேவி – லிங்கேஸ்வரன் திருமணம் விமரிசையாக நடைபெற்றுள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ள வினுஷா தேவி – லிங்கேஸ்வரன் ஜோடிக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
