சென்னை: ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறியதாக பாராலிம்பிக் சாம்பியன் இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு பிறப்பித்துள்ளது.
அடுத்த ஆண்டு (2025) செப்டம்பர் 1ம் தேதி வரை சுமார் 18 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் 28ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 13) காலை வெளியிடப்பட்ட உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் அறிக்கை இதனை உறுதி செய்துள்ளது. பாராலிம்பிக் போட்டிகள் வரும் 28ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை 11 நாட்கள் பாரிஸில் நடைபெற உள்ளது. கடந்த முறை போல் இந்தியா முத்திரை பதிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டும் இந்தியா 19 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் பிரமோத் பகத்தின் தங்கமும் உள்ளது.
பிரமோத் பகத் 1988 இல் பிறந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது ஐந்து வயதில் போலியோவால் இடது கால் பாதிக்கப்பட்டது. தனது 13வது வயதில் பூப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு தொழில் பயிற்சி எடுத்தார். டோக்கியோ பாராலிம்பிக்ஸில் SL3 பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் போன்றவற்றிலும் பதக்கங்களை வென்றுள்ளார்.