சென்னை: நடிகர் சண்முக பாண்டியன் இயக்குநர் மணிசேயோன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன், தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது அறிமுகப் படமாக ‘சகாப்தம்’ வெளியானது.
அதனைத் தொடர்ந்து ‘மதுரை வீரன்’, ‘படைத்தலைவன்’, ‘கொம்புசீவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தில் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரித்து வருகிறார்.
இதற்கிடையே, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 10-வது திரைப்படத்தில் கதாநாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை மணிசேயோன் இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
